Home » Articles » காதலர் தேசம் » காதலர் தெரிந்துகொள்ள | [ Add new entry ] |
காதல் எனப்படுவது யாதெனில்
இப்பொழுது வந்ததற்கு பதிலாக, நீங்கள் மூன்றாண்டுகளுக்கு முன்பே வந்திருக்கலாம். அப்பொழுது அவரெனக்கு நல்ல தோழியாக மட்டும் தான் இருந்தார். எனது குறைகளை குறையென மட்டுமே சொல்லாமல் திருத்திக்கொள்ளும் வழியினை சொல்லித் தருவதிலும், என்னால் தீர்த்துவிட முடியாதெனத் தெரிந்த போதும் தனது வருத்தங்களை என்னிடம்… என்னிடம் மட்டுமே பகிர்ந்து கொண்டதிலும், தனது நெருங்கிய தோழிகளைக்காட்டிலும் என் மீது அவருக்கு அன்பும், நம்பிக்கையும் அதிகமுண்டென்பதை அவருடைய செயல்கள் அனிச்சையாய் நிரூபித்துக்கொண்டே இருந்தன. எனக்குள் மட்டுமே கூடு கட்டிக் குடியிருந்த எனது எதிர்காலக் கனவுகளெல்லாம் சிறகடித்து அவரிடம் பறந்து சென்றபோதும், அவரது அருகாமையில் மட்டுமே நான் முழுமையடைவதாய் உணர்ந்துகொள்ளத் துவங்கிய போதும், எங்களுக்குள் முளைத்த நட்பு காதலாய் மலருமென நான் எதிர்பார்க்க வில்லைதான். ஆனாலென்ன? நல்ல நட்பிலிருந்து மலர்வது காதலுக்கும் அழகுதானே? காதலிக்கிறோமெனத் தெரிந்த பின்னும் வெளிப்படையாய்ச் சொல்லிக்கொள்ளாமலே காதலிக்கும் இன்ப அவஸ்தையை அனுபவித்திருக்கிறீர்களா? காதலிக்குப் பிடித்த பாடலை செல்பேசியில் அழைப்பிசையாகவும், காதலிக்குப் பிடித்த புகைப்படத்தை கணினித் திரையிலும், காதலியின் பிறந்த நாளைக்குறிப்பிடும் எண்ணில் செல்பேசி இணைப்பும் வைத்துக்கொண்டதுண்டா? காதலியின் அறைத்தோழி உதவியுடன் காதலிக்குப் பிடித்த பரிசுப்பொருளை அவள் தலையணைக்கடியில் ஒளித்துவைத்து, இரவு பனிரண்டு மணிக்கு அழைத்து பிறந்த நாளுக்கு வாழ்த்தி, தலையணையை எடுத்துப்பார்க்க சொன்னதுண்டா? நீங்கள் தேநீரும் உங்கள் காதலி குளிர்பானமும் குடிக்கின்றபோதும் தேநீர் சுட்டுவிட்டதாய்ச் சொல்லி அவள் குடித்த பாதி குளிர்பானம் குடித்ததுண்டா? இந்த கிறுக்குத்தனங்கள் கூட இல்லையென்றால் அப்புறமென்ன காதல்? இரவுநேரப் பேருந்தில் தனியேப் பயணிக்கும் உங்கள் காதலி நெடுஞ்சாலை உணவகத்தில் பேருந்து நின்றபோதும் தனியே செல்ல பயந்து சாப்பிடவில்லையென அனுப்பிய ஒரு குறுஞ்செய்தி இரவு முழுக்க உங்களை உறக்கமிழக்கச் செய்திருக்கிறதா? உங்களுக்கு நம்பிக்கையில்லாத போதும் உங்கள் பிறந்தநாளில் நெடுந்தூரம் தனியே பயணித்து கோவிலுக்கு சென்று பிரார்த்திக்கும் உங்கள் காதலியின் அன்பைப் புரிந்து கொள்ள, உங்கள் மனம் பக்குவப்பட்டிருக்கிறதா? சின்ன விசயத்துக்கெல்லாம் கோபித்துக்கொள்ளும் உங்கள் காதலியிடம் பெரிய விசயத்தையும் கோபமூட்டாமல் சொல்லிவிடும் கலையை, காதல் உங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறதா? இப்படி கட்டுப்பாடற்ற அன்பில் துவங்கவில்லையென்றால் அப்புறமென்ன காதல்? தனிமையில் உங்களைப் பொய்யாக கிண்டலடித்துக் கொண்டேயிருக்கும் காதலி, அவள் தோழிகளுக்கு முன்னால் உங்களை விட்டுக்கொடுக்காமல் பேசுவதைக் கவனித்திருக்கிறீர்களா? உங்களிடம் பேசும்போது ஒருமையில் அழைக்கும் காதலி, உங்களைப் பற்றி பிறரிடம் சொல்லும்போது மரியாதையோடுக் குறிப்பிடுவதை ரசித்திருக்கிறீர்களா? அது, உங்கள் காதலியைப்பற்றி மூன்றாம் நபரிடம் நீங்கள் பேசுகையில் ‘அவள்’ என்பதற்குப் பதிலாக ‘அவர்’ என்று விளிக்க உங்களைப் பழக்கியிருக்கிறதா? இப்படி ஒருவர் மீது ஒருவருக்கு மரியாதை ஏற்படுத்தாவிட்டால் அப்புறமென்னக் காதல்? பெற்றோர் சம்மதிக்காத நிலையில் வீட்டைவிட்டு ஓடிவந்தாலும் இப்பொழுதிருப்பதைக் காட்டிலும் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வீர்களெனும் நம்பிக்கை தனக்கிருப்பதாக உங்கள் காதலி உங்களிடம் உளறியதுண்டா? அப்படி சொன்னபோதும் கூட நீங்கள் அவரை வீட்டைவிட்டு ஓடிவர சொல்லிவிட மாட்டீர்கள் எனும் அவரது நம்பிக்கையை நீங்கள் காப்பாற்றியிருக்கிறீர்களா? இப்படி ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை உருவாகாவிட்டால் அப்புறமென்ன காதல்? காதலுக்காக உயிரிழப்பதைப்போலவே நீங்கள் காதலுக்காக உயிரை இழந்ததுண்டா எனக்கேட்பதும் முட்டாள்தனம் தான். ஆனால் உங்கள் உயிரை விட அதிகமாய் நீங்கள் நேசிப்பவர்கள் உங்கள் மீது வைத்திருந்த மதிப்பை, காதலினால் இழந்திருக்கிறீர்களா எனக் கேட்கலாம். உங்கள் காதலி உங்களைத்தவிர வேறொருவரை மணக்கமாட்டாள், உங்களுக்காக வீட்டைவிட்டு வரவும் தயாராயிருக்கிறாள் என்பதையெல்லாம் சொல்லி உங்கள் வீட்டில் சம்மதம் வாங்கிக் காத்திருக்கையில் காதலிக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதையறிந்து பதறியிருக்கிறீர்களா? காதலை நேரடியாய்ச் சொன்ன காதலி தன்னை மறந்துவிடச்சொல்வதற்கு தோழியைத் தூதனுப்பிய போதும் உங்களுக்கு அவர் மீது கோபம் வராமல் பரிதாபம் வந்ததுண்டா? குடும்பத்தின் மதிப்பையும் இழந்து காதலியையும் இழந்து சொந்த வீட்டுக்குள்ளேயே ஓர் அகதியைப் போல வெறுமையை உணர்ந்திருக்கிறீர்களா? இந்த இழப்பைக்கூட ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் அப்புறமென்ன காதல்? விடிந்தால் உங்கள் காதலிக்கு திருமணம் என்ற நிலையில் உறங்கப் பிடிக்காமல் இரவு முழுக்க வோட்கா குடித்திருக்கிறீர்களா? நான் குடித்துக்கொண்டிருக்கிறேன். இது இருபத்து நான்காவது கோப்பை. பார்த்தீர்களா… அவருக்கும் இருபத்து நான்கு வயதுதான். என்ன? காதல் தோல்விக்காக குடிப்பது முட்டாள்தனமா? காதல் தோல்விக்காக யார் குடிக்கிறது? என்னுடைய துயரங்கள் உங்களுக்குப் புரியுமா? அவருக்கு சைனஸ் தொல்லை இருப்பதால் மழைக்காலத்தில் அடிக்கடி சளி பிடிக்கும். சின்ன விசயத்துக்கெல்லாம் கோபம் வரும். ஒரு விபத்தில் அவருடைய இடது கையில் எலும்புமுறிந்து பிளேட் வைத்திருப்பதால் எடை தூக்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். செண்ட், டியோடரண்ட் எல்லாம் அவருக்கு அலர்ஜி. கூட்டத்தில் சாப்பிடப்பிடிக்காது. அதிக நகைகளோ, மேக்கப்போ விரும்ப மாட்டார். புடவையைவிட சுடிதார்தான் பிடிக்கும். இப்படி ஆயிரம் விசயங்கள் அவரைப்பற்றி எனக்குத் தெரியும். எல்லாவற்றையும் அவருடையக் கணவர் சரியாகப் புரிந்து கொண்டு அவரை நேசிப்பாரா என்று நான் கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வந்ததற்குப் பதிலாக மகிழ்ச்சியாக இருந்த மூன்றாண்டுகளுக்கு முன்பே வந்திருக்கலாம். யெஸ்! மிஸ்டர் எமன்! நீங்கள் மூன்றாண்டுகளுக்கு முன்பே வந்திருக்கலாம். அமராவதி ஆத்தங்கரை | |
Views: 1974 | Comments: 4 | |
Total comments: 2 | |
. . | |