Home » Articles » கணணி வளாகம் » மென்பொருட்கள் | [ Add new entry ] |
அப்பிள் நிறுவனமானது கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இவ்வழக்கினைத் தொடுத்தது. இதனூடாக செம்சுங்கிடம் சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை நட்ட ஈடாகக் கோரியிருந்தது. இதற்குப் பதிலடியாக வழக்குத் தொடுத்த செம்சுங், அப்பிளிடம் 399 மில்லியன் அமெரிக்க டொலர்களை நட்ட ஈடாகக் கோரியிருந்தது. கடந்த ஒருவருட காலத்துக்கு அதிகமாக நீடித்த இவ்வழக்கின் தீர்ப்பானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது. அப்பிள் கோரிய 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்ட ஈட்டுத் தொகையை ஏற்க மறுத்த நீதிமன்றம் சுமார் 1 பில்லியன் டொலர்களை மட்டும் வழங்கும்படி செம்சுங்குக்கு உத்தரவிட்டது. செம்சுங்கின் ஸ்மார்ட் போன்கள் மற்றும் டெப்லட்கள் அப்பிளின் காப்புரிமை செய்யப்பட்ட வசதிகளைப் பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றம் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தது. இதேவேளை செம்சுங்கினால் அப்பிளிடம் நட்ட ஈடு கோரி தொடுக்கப்பட்ட வழக்கையும் நிராகரித்தது. இத்தீர்ப்பினைத் தொடர்ந்து செம்சுங்கின் மொபைல் அமெரிக்காவில் விற்பனை செய்வதற்கான தடையையும் அப்பிள் நீதிமன்றத்தில் கோராலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இத்தீர்ப்பானது பிரித்தானியா போன்ற நாடுகளில் செம்சுங்கின் மொபைல் சாதனங்களின் விற்பனையைப் பாதிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இத்தீர்ப்பினை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக செம்சுங் அறிவித்துள்ளது. செம்சுங்குக்கு எதிராக வழங்கப்பட்ட இத்தீர்ப்பானது மற்றைய நிறுவனங்கள் பலவற்றை குறிப்பாக அண்ட்ரோய்ட் இயங்குதளத்தினை தமது மொபைல் சாதனங்களில் உபயோகிக்கும் நிறுவனங்களிடையே அச்சத்தினைத் தோற்றுவித்துள்ளது. தாமும் இத்தகைய ஒரு பாரிய தொகையினை நட்ட ஈடாக செலுத்த வேண்டிவரலாம் என அவை அச்சங்கொண்டுள்ளன. செம்சுங்கின் ஸ்மார்ட் போன்கள் விற்பனையானது தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமை அப்பிளுக்கு மிகப் பெரும் தலையிடியாக மாறியிருந்தது. இந்நிலையில் இத்தீர்ப்பானது அப்பிளுக்கு சற்று உற்சாகமளித்துள்ளது என்பது மட்டும் நிச்சயம். | |
Views: 1328 | |
Total comments: 0 | |