அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண் அழுகையும் கண்ணீரும் இறைவன் இவளுக்களித்த இலவச இணைப்புக்களோ? இருபத்தைந்து வயதுப் பெண்ணுக்கு இரவுகள் கனவுகளோடு பயணிக்கும் ஆனால் இவளுக்கு வாழ்க்கையெனும் பயணமே கனவாகிப் போய்விட்டது. பள்ளியில் அன்று துள்ளித்திரிந்த முகம்தான் ஆனால் இன்று அள்ளி முடிய மறந்திட்ட தலைமுடியோடு பிள்ளையைக் கையில் அள்ளியணைத்தபடி வெயிலில் நிற்கிறாள் ஒருவேளை உணவுக்காய். தெற்கிருந்து வடக்குநோக்கி வேகமாக வீசிய யுத்தப்புயல் இவளது குங்குமத்தையுமல்லவா அடித்துச் சென்றுவிட்டது. அவள் கன்னங்களில் காய்ந்துபோன கண்ணீர்த்துளியின் எச்சங்கள் அவள் சோகத்தைச் சொல்லாமல் சொல்லியது. முன்பெல்லாம் பள்ளியில் என்னையிவள் கண்டுவிட்டால் நாணப்பட்டு கிளைகளுக்குப் பின்னால் ஒழிந்துகொள்ளும் மலரைப்போல தன் தோழிபின்னால் ஒழிந்துகொள்வாள் ஆனால் இன்று என்றோ தொலைந்துபோன புன்னகையை ஞாபகித்து உதிர்த்துவிட்டு நிறகிறாள். ஏனெனில் உணவுக்காக வரிசையில் காத்துநிற்கவேண்டுமென்ற தமிழனின் தலைவிதிக்கு அவள் மட்டும் விலக்கா என்ன? சினேகிதியே! என்னால் முடிந்தது, உனக்காகவும் என் அனுதாபத்தின் ஒரு பகுதியை பங்குபோடத்தான் முடியும். வெற்றிக் கழிப்பில் போதையாடும் சிங்களச் சகோதரர்களே உங்கள் கழியாட்டத்திற்கு எங்கள் ஈழம்தான் “கொலோசியமா”? விலையாக எங்கள் பெண்களின் குங்குமத்தையும் பூவையுமா எடுக்கவேண்டும்? |