Home » Articles » கவிதைகள் » ஏனைய கவிதைகள் | [ Add new entry ] |
உள்ளிருந்து ஒரு குரல்
மனிதர்களே! வண்ணங்கள் கொண்டு எங்கள் வாழ்க்கையை வனைய வேண்டாம் நிறையப் புனைகதை புனைந்து எங்களுக்கு அனுதாபம் தேடித்தரவும் வேண்டாம் நாங்கள் தொலைத்ததில் கொஞ்சத்தையும் சுமப்பதில் கொஞ்சத்தையும் அங்கங்கே எழுத்துப்பிழைகளோடாவது எழுதினால் போதும் நாங்கள் மீண்டும் உயிர்பெறுவோம். நம்புங்கள் மனிதர்களே! முள்ளுக்கம்பிகளுக்குள் முளைத்து நிற்பவை எங்கள் கனவுகளின் சமாதிகளே மீட்பின் பெயரால் நடந்துகொண்டிருப்பது அழிப்பின் அதி உச்சமே இங்கு வசந்தம் என்பது வாடகைக்கு கூட இல்லை மறுவாழ்வு என்பது மருந்துக்கும் இல்லை. ஒரு இரவுக்கும் பகலுக்கும் இடையில் பல வருடங்களை தின்றபடிதான் எங்கள் காலச்சக்கரம் சுழல்கின்றது பல வார்த்தைகளை தின்றுவிட்டுத்தான் சில வார்த்தைகள் பேசுகின்றோம் இங்கே குயில்கள் கூவுவதில்லை காதில் கேட்பதெல்லாம் முகாரி ராகங்களே கால்களுக்கு காப்புறுதி உயிர்கள் என்பதால் எந்த மயிலும் நடனம் ஆட நினைப்பதில்லை தாயொரு கூடாரத்தில் அதன் சேயொரு கூடாரத்தில் நடுவில் ஏழு வரியில் முள்ளுக்கம்பிகளும் அதைச்சுற்றி "மல்லி”த் தம்பிகளுமாய் எங்கள் வாழ்வு எங்கோ தொலைந்து கரைகிறது எந்தப்பகலிலும் இருளே நிறைந்து வழிகிறது ஒரு குடம் தண்ணிக்கு நாலு நாள் வரிசையில் நிற்போம் வெறும் கஞ்சிக்கு கையேந்தி இன்னும் எத்தனை நாள் எங்கள் ஜீவனை வளர்ப்போம்? உறவைச் சந்திக்கும் நேரத்தில் தள்ளி நின்று அழுவோம் சந்திக்க உறவே இல்லாதோர் தனியிருந்தும் அழுவோம் கொஞ்சம் சிந்திக்கும் நேரத்தில் சிறகொடிந்து துடிப்போம் ஆயினும் பறக்கவே துடிக்கின்றோம் சுதந்திரமாய் கந்தகம் கலந்த போதும் சுதந்திரம் சுமந்த காற்றை எப்போது தொலைத்தோமோ அப்போதே செத்துப்போனோம் ஆயினும் இப்போதும் உயிர்வாழ்கின்றோம் மறுவாழ்வு வேண்டி மறுவாழ்வு என்பது மீண்டும் கந்தகம் கலந்தாலும் சுதந்திரம் சுமந்த காற்றை சுவாசித்தலே ஆறாத எங்கள் காயத்திற்கு அருமருந்து அந்த சாலைகளின் ஓரங்களில் காலாற நடத்தலே | |
Views: 1097 | Comments: 1 | |
Total comments: 1 | |
. | |