செவ்வாய், 16/04/24, 12:48 PM
Welcome, Guest
Home » Articles » கவிதைகள் » ஏனைய கவிதைகள் [ Add new entry ]

காதல் கொண்டேன் ஈழத்தில்

பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது
பார்த்த விழியிரண்டும்
கோலமிழந்துமே கூடும் துயிலதைக்
கொள்ள மறுத்தன, ஓர்
ஓலைநடுவினில் ஊதி வரும் தென்னங்
காற்றின் குளிர் கரமும்
காலைமலர் நீவி மேனி தொடபெருங்
காயமென் றாகிடுதே

காத லெனும்நோயே, ஈதறிவே னெந்தன்
காதலோ ஈழம்மெனும்
நாத மணித்திரு நாட்டின் மீதுகொண்டேன்
நானதை வேண்டிநின்றேன்
போதும் பொழுதுமோர் தூக்கமில் லைஅதை
பெற்றிடலன்றி என்னை
சாதலி ருந்துமே காத்திட பாரினில்
சற்றும் வழியொன்றில்லை

வீர வழிவந்த வேங்கையின் மைந்தரும்
வேண்டிய காதலிது
ஈர விழிகொண்ட மாதரும் வீறுடன்
எண்ணிய தாகம் இது
ஊரை அழித்தவர் உள்மனதில் கொண்ட
ஓங்கிய மோகம் இது
பாரைக் கிலிகொள்ள வைத்த தலைவனும்
பாசமெடுத்த திங்கு

நானும் எண்ணியிங்கு வாடுகிறேன் எந்தன்
நெஞ்சினில் ஆசைகொண்டேன்
ஊனும் உருகிட உள்ளம்சுதந்திர
தாகம் அதிகம் கொண்டேன்
தேனும் பாலும் உண்டு தித்திக்க வாழ்வதில்
ஏது பயனிருக்கு?
ஆனவழி ஒன்று கண்டிடவேண்டுமே
ஈழம் அமைப்பதற்கு

தாயைத் தமிழ்திரு ஈழஅன்னைதனை
தேரிலி ருத்தியொரு
வேய்குழல் மீதினில் வெள்ளிச்சரமென
வீர சுதந்திரத்தை
பாயும்புலி எனும்தீர முடன் ஓடிப்
பெற்றே விடுதலையை
தூயமலரென அள்ளி  அணிசெய்து
ஊர்வலம் வந்திடுவோம்

வெட்டும் பகைவரை வீரமெடுத்துமே
வெஞ்சினம் கொண்டு மண்ணை
விட்டுத் தலைதெறித் தோடிடச் செய்திட
வீரரே கூடியெழும்
பெட்டி படுக்கையைத்  தான்சுருட்டி யவர்
பின்னே திரும்பிவிழி
தொட்டு நம்மீழ தமிழ்நிலத்தை மாசு
செய்யா துரத்திடுவோம்

Category: ஏனைய கவிதைகள் | Added by: tamil (23/05/11)
Views: 1437 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]