கட்டை வெட்டி நட்டு முள் வேலி வரிகள் கட்டம் இட்டு அடைத்திருக்க முற்றத்து மலர்கள் மூன்றரை லட்சம் முள் வேலிக்குள் வெப்பத்தில் கிடக்கின்றன அன்னை ஓர் முகாமில் தந்தை ஓர் வதை முகாமில் பிரிக்கப்பட்ட பிள்ளைகளோ படுகொலை முகாம்களில் யார் உள்ளாரோ யார் யார் இறந்தாரோ இவர்களின் நெஞ்சக் குமுறலுக்குள்ளே விடையில்லா கேள்விகள் எத்தனையோ கருக்களை சுமந்து கானலில் கரைகின்றன உலர்ந்த மலர்கள்தான் இவர்கள் உதிர்ந்தவரல்ல நம்பிக்கையெனும் நார் மட்டும் இன்னும் இளையோடிக் கிடக்கிறது விட்டுப் போன மண்ணும் விதைக்கப் பட்ட விடுதலையும் தொடுக்கப் படும் அந்த மாலைக்காகவே முட்களை எண்ணி கழிக்கின்றனர் நாட்களை ஆயுத முதலைகளே படைத்துக் கொடுத்தீர் படையும் கொடுத்தீர் இரண்டாம் உலகப் போரின் தொடரென்றா இருபது நாடுகள் துணை போனீர் ஈரினப் போரல்லவா எம் மண்ணில் இழி நிலை தாழ்வுக்கு ஏன் பணிந்தீர் முள் வேலிகள் ரணங்கள்தான் எமக்கு மரணப் படுக்கை விரிந்து கிடக்க மகுடம் வேண்டோம் மரபுப் போர் விலகி ஆயுதங்களை மெளனித்தோம் விட்டுப் போன மண்ணையும் விதைக்கப் பட்ட விடுதலையையும் - மறவோம் தொடுப்போம் ஓர் நாள் தமிழீழ மாலையாய். |