எதிர்க்கட்சிகள் வாழ்க!
ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு ‘ஸ்பெக்ட்ரம் விஷயம் என்பது முடிந்துபோன ஒன்று’ என்றார் தமிழக முதல்வர்.
ஓர் ஊழல் குற்றச்சாட்டுக்கான கோப்பு இப்படித்தான் முடிக்கப்படும் என்றால் உண்மைகள் ஒருபோதும் வெளிவரா.
ஊழல் நடைபெறவில்லை என்பதை எதிர்க்கட்சிகள் ஏற்க வேண்டும். அவை நம்பும்படியான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகள் திருப்திப்பட்டுவிட்டால் போதும். பொதுமக்கள் குறிப்பாக ஓட்டளிப்பவர்கள் திருப்திப்பட்ட மாதிரிதான். தமிழக முதல்வர் இக்கோப்பிற்கு முடிச்சுப்போட நினைத்தாலும் எதிர்க்கட்சிகளால் அவிழ்க்கப்பட்டு ஒளி வெளிச்சம் பாய்ச்சப்பட்டுவிட்டது.
அமைச்சர் ராசா அளித்த விளக்கங்கள் ஏற்கும்படியாக இல்லை என்பதால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் வெளிநடப்புச் செய்திருக்கிறார்கள்.
நேர்மையாளர் என்று பாராட்டுப் பெறும் நம் பிரதமர் இதுபற்றி வாய்திறவாப் போக்கைக் கடைப்பிடிப்பது கூட்டணியைக் காப்பாற்றும் முயற்சியோ என்றுகூட ஐயம் கொள்ளச் செய்கிறது.
இப்போது உள்ள ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் இரத்து செய்யப்படவேண்டும் என்கிற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை மிக நியாயமானது.
எந்தவிதத்தில் என்றால், கடந்த ஆண்டு 1651 கோடி கொடுத்து இந்த உரிமத்தைப் பெற்ற யூனிடெக் நிறுவனம், கையோடு வேறு ஒரு நிறுவனத்திற்கு இவ்வுரிமத்தின் ஒரு பகுதியை மட்டும் கொடுத்து 4449 கோடி இலாபம் பார்த்துவிட்டது.
இதிலிருந்தே ஸ்பெக்ட்ரத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை எவ்வளவு குறைவு என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது.
இக்கட்டணத்தை நிர்ணயித்த தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் எவ்வளவு பலவீனமான வெற்றுக்குழு என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. இந்த பலவீனம் பணத்தின் அடிப்படையிலானதாக இருக்கலாம் என்றும் நாம் ஊகிக்க வேண்டியிருக்கிறது.
2001ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட தொகை 2007 வரை மறு மாற்றம் பெறாதது ஏன் என்கிற கேள்விக்கும் சரியான விடை இல்லை. இவற்றுக்கெல்லாம் உச்சமாக அமைச்சர் ராசா அளித்துள்ள விளக்கம்தான் மிகப் பலவீனமாக இருக்கிறது.
irst come, First served என்கிற அடிப்படையில் முதலில் வருபவருக்கு இது வழங்கப்பட்டது என்கிறார்.
மிகச் சிறிய அரசுப் பணிகளில் டெண்டர் முறை பின்பற்றப்படுகிறபோது பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை அள்ளித்தரவல்ல ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் எப்படி இப்படிக் கோட்டை விடலாம்.
‘முதலில் வருகிறவருக்கு முதலில்’ என்பதைப் பின்பற்ற இது என்ன திரையரங்கு நுழைவுச் சீட்டா?