Home » Articles » அறிவியற்களம் » செய்திகள் | [ Add new entry ] |
கருப்பு: கண்டனம். ஜ்யோவராம் சுந்தர்
மீது நடந்த வன்முறைக்கு. இங்கே நான் வன்முறை எனக் குறிப்பிடுவது அவர்
மூக்கில் விழுந்த குத்தை அல்ல. அந்தக் குத்து விடுமுன் அழைக்கப்பட்டு
நம்பிக்கையோடு திரும்பினாரே, அந்த நம்பிக்கையை ரோசா வசந்த் சிதைத்ததுதான்
மிகப் பெரிய வன்முறை. ‘எனக்கு உங்களுடைய ஒரு கருத்தில் உடன்பாடில்லை
ஜ்யோவ். வாருங்கள் சண்டையிடலாம்’ என்றே அழைத்திருக்கலாம். எழுத்திற்காக
மூக்கில் அடிவாங்க நேருமென்றால் எழுத்தாளர்கள் எல்லாருமே ப்ளாஸ்திரி
சுற்றப்பட்ட மூக்கோடுதான் இருக்க வேண்டிவரும். ‘உன் கருத்தில் எனக்கு
உடன்பாடில்லை. ஆனால் அந்தக் கருத்தைச் சொல்ல உனக்கிருக்கும் உரிமைக்காக
என் உயிரையும் கொடுக்கத் தயார்’ என்ற வால்ட்டேரை வணங்குகிறேன். சிகப்பு: வன்முறை. உறவினர் ஒருவரின் சிகிட்சை காரணமாக மருத்துவமனை செல்ல நேர்ந்தது. அப்போது அவசர சிகிட்சைப் பிரிவுக்கு ஸ்ட்ரக்சரில் கொண்டு வரப்பட்டார் ஒரு இளைஞர். தலைமுழுக்க வறுமையின் நிறம் சூழந்திருந்தது. பைக் விபத்து. எப்போதுமே ஹெல்மெட் போடுவாராம். அன்றும் போட்டிருந்தாராம். ‘அப்புறம் எப்படி?’ என விசாரிக்கையில், ஹெல்மெட்டின் பட்டியை (STRAP) போட மாட்டாராம். எதிரில் வந்த காரால் எகிறி அடிக்கப்பட்டதில் பத்தடி உய்ரத்தில் பறந்தபோது ஹெல்மெட் கழன்று எங்கோ விழுந்திருக்கிறது. எத்தனையோ நண்பர்களுக்கு இதை நான் சொல்லியிருக்கிறேன். அன்றைக்கு, அதுவும் அத்தனை ரத்தத்தோடு அந்த இளைஞனைப் பார்த்த பிறகு இதனைக் கேள்விப்பட்டதும் அவனது அஜாக்கிரதைக்காக மனதுக்குள் அவனைத் திட்டினேன். Get well soon buddy! பச்சை: பசுமை. மரங்கள். இயற்கையின் காதலன் நான். எங்கே மரம் வெட்டப்பட்டாலும் என் மனம் அழும். எங்கள் அலுவலக வளாகத்திற்குள்ளேயே ஒரு மரம் வெட்டப்பட்டது. வேறு எந்த வழியுமில்லாமல் போனது. அன்றைக்கு முழுதுமே ஏதோ கொலையாளி போல என்னை நானே உணர்ந்தேன். பிராயச்சித்தமாக குறைந்தது ஐந்து மரங்களையாவது நட எண்ணம். நிச்சயம் செய்வேன். நீலம்: அன்பு. வேலை, குடும்பம், வலையுலகம் என்பதையும் மீறி சென்னைவாசிகளை வதைக்கும் ஒரு விஷயம் பிரயாணம். அவர்களின் ஒரு நாளின் இருபத்தைந்து சதவிகித நேரத்தை பிரயாணம் எடுத்துக் கொள்கிறது. தன் சுற்றத்தாரை நேசிக்க கூட நேரம் இல்லாமல் போகிறது. அன்பு வாழ்வின் ஆதாரம்.Love yourself! மஞ்சள்: எச்சரிக்கை. நாட்டை செல்ஃபோன் வியாதி மிகத் தீவிரமாக பற்றிக் கொண்டு வருகிறது. ஒரு ஃபோன் என்பதைத் தாண்டி, இரண்டு ஃபோன்கள் என்பது சர்வசாதாரணமாகி விட்டது. (அதில் ஒன்று டபுள் சிம் ஃபோன்!) பொது இடத்தில் புகைக்கத் தடை இருப்பதுபோல (இருக்கிறதுதானே?) செல்ஃபோன் பேசவும் தடைவிதிக்கலாம். விதிக்கும் காலம் வரலாம். அத்தனை உரக்கக் காதலிக்கிறார்கள் ஃபோனில். அத்தனை உரக்கச் சிரிக்கிறார்கள். அத்தனை உரக்க உரையாடுகிறார்கள். அத்தனை உரக்கக் கட்டளையிடுகிறார்கள். அவர்களின் காதலியின் முத்தம் என் கன்னத்தில் விழுகிறது. அவர்களின் வெட்கம் என்னைப் பற்றிக் கொள்கிறது. மருத்துவமனையில் சிலரின் வேதனை முகங்களுக்கு நடுவே, அவர்களின் சிரிப்பொலி எனக்கு எரிச்சலைத் தருகிறது. அவர்கள் வீட்டு சாம்பாரில் என்ன காயென்று எனக்குத் தெரிகிறது. அவர்களின் கோவம் என்னை நடுங்கச் செய்கிறது. அவர்களின் கட்டளை என்னையும் செலுத்துகிறது. அவர்களுக்கு நடுவே, அலைபேசியை மௌனித்து வைத்திருக்கும் நான் அந்நியனாகிறேன். என்னிடம் அலைபேசி இல்லையென்று அவர்கள் நினைப்பார்களோ, அப்படி இருப்பது கௌரவக்குறைவோ எனும் பேதமை எண்ணம் என்னைச் செலுத்த, வெறுமனே எடுத்துப் பேசுகிறேன். கத்துகிறேன். சிரிக்கிறேன். தொலைக்காட்சியை இடியட் பாக்ஸ் என்கிறீர்கள். அதன் அப்பனுக்கு அப்பனை பாக்கெட்டிலேயே வைத்துக் கொண்டு திரிகிறோம். உபயோகிக்கும் முறை தவறி. உடனடியாக எல்லாரும் அலைபேசி சாத்தானிடம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். Be Alert! வெண்மை: அமைதி. ஒன்றுமே எழுதாமல் அமைதியாகவே இருக்கிறேன். விட்டால், எதையும் பேசாமல் ரொம்பவும் அமைதியாக இருப்பதால் அமைதிக்கான நோபல் பரிசை எனக்கும்கூட கொடுத்துவிடுவார்கள் என்பதால் இதை எழுதுகிறேன். வெண்மை சமாதானத்திற்கும் அடையாளமாகச் சொல்வார்கள். பதிவுலகின் சண்டைகளும், பொறாமைகளும், சமாதானமடைய என்னை நானே வேண்டிக் கொள்கிறேன். அதை நோக்கி அனைவரும் செயல்படலாம். ஆதிமூலகிருஷ்ணன் ஒன்றை ஆரம்பித்தது போல, எல்லாரும் பகைமைகளை, வேதனைகளை மறக்கச் செய்ய ஏதாவது எழுதி, நம்மை படிக்க மட்டுமே வரும் இணைய வாசகர்களை ஆற்றுப்படுத்தலாம். Let’s Make it Happen! | |
Views: 1321 | |
Total comments: 0 | |