Home » Articles » அறிவியற்களம் » செய்திகள் | [ Add new entry ] |
உலகின் முதனிலை இணைய நிறுவனங்களில் ஒன்றான கூகிள் நிறுவனத்தின் இணைய நூலகத் திட்டத்தில் சர்ச்சை கிளம்பியுள்ளது. மிகப்பாரிய நூல் களஞ்சியம் ஒன்றையும், நூலகமொன்றையும் இணையத்தில் உருவாக்கும் பணிகளில் கூகிள் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. புலமைச் சொத்து உரிமை தொடர்பான பிணக்குகளின் காரணமாக திட்டத்தை முன்னெடுப்பதில் சர்ச்சை எழுந்துள்ளது. புத்தகங்களின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய புலமைச் சொத்துரிமைக் கட்டணங்கள் செலுத்தப்படவில்லை எனத் தெரிவித்து கூகிள் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த பிணக்கு தொடர்பில் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கு அமெரிக்க நீதிமன்றம் இரு தரப்பினருக்கும் கால அவகாசம் வழங்கியுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 19ம் திகதிக்கு முன்னதாக இந்த பிணக்கு தொடர்பில் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அமெரிக்க மாவட்ட நீதவான் டென்னி சின் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். 2005ம் ஆண்டு முதல் புத்தகங்களுக்கான புலமைச் சொத்து உரிமைப் பிரச்சினை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நூலாசிரியர்களுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வது குறித்து கூகிள் நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு போதியளவு கால அவகாசம் வழங்குமாறு கூகிள் நிறுவனம் நீதிமன்றில் கோரியிருந்தது. கூகிள் புக்ஸ் மற்றும் கூகிள் ஈபுக்ஸ் ஆகிய சேவைகளின் ஊடாக பாரியளவிலான புத்தகங்கள் இணையத்தில் சேர்க்கப்படும் என கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது. 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 15 மில்லியன் புத்தகங்கள் இவ்வாறு இணையத்தில் சேர்க்கப்படவுள்ளன. நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் புத்தகங்களை இணையத்தில் சேர்க்கும் முயற்சி கைவிடப்பட மாட்டாது என கூகிள் தெரிவித்துள்ளது. அனுமதியின்றி கூகிள் நிறுவனம் புத்தகங்களை ஸ்கேன் செய்ததாக பிரான்ஸ் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த முயற்சியின் மூலம் நூலாசிரியர்கள் நன்மை அடைவார்கள் என ஒரு தரப்பினரும், நூலாசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என மற்றுமொரு தரப்பினரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். | |
Views: 1013 | |
Total comments: 0 | |