வியாழன், 28/11/24, 10:22 AM
Welcome, Guest
Home » Articles » அறிவியற்களம் » பாலியல் [ Add new entry ]

முந்துதல் வேண்டாமே!

விந்து முந்துதல்.

இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும். இதனால், தங்கள் ஆண்மையே பாதிப்புக்கு உள்ளாகி விட்டதாகவும் மனைவியைத் திருப்திப்படுத்த முடியவில்லையே எனவும் பல ஆண்கள் மனம் புழுங்குகிறார்கள். இயலாமையால் ஆற்றாமையால் மனப்பதற்றம், சோர்வு போன்றவற்றுக்கும் ஆளாகிறார்கள். அதேநேரம், அவர்கள் மனைவிமாரோ ` இவர் தன்ரை வேலை முடிந்ததும் நடையைக் கட்டி விடுகிறார். என்னைக் கவனிப்பதில்லை ' என மனத்திற்குள் சினம் எழத் தவிக்கிறார்கள். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருவருமே துன்புறுகிறார்கள்.

இது ஒரு பரவலான பிரச்சினை ஆன போதும் இதற்கான அடிப்படைக் காரணம் தெளிவாகப் புரியவில்லை. இருப்பினும் உயிரியல் காரணங்களும் மனோவியல் காரணங்களும் இணைந்தே இருப்பதை வைத்தியர்கள் உணர்கிறார்கள். இதனால்தான், இதற்கான சிகிச்சையும் கூட பல் வழிப்பட்டதாகவே அமைகிறது.

உறவின் போது நிதானத்தைக் கடைப்பிடித்து, செயல் முறைகளில் துரித ஸ்கலிதத்திற்கு இடம் அளிக்காத மாற்று முறைகளைக் கையாள்வது நல்ல பலனைக் கொடுக்கிறது. இதுதவிர சில மருந்து மாத்திரைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

இவை தவிர, சில வெளிப் பூச்சு களிம்புகளும் பலன் அளிக்கும் என நம்பப்படுகிறது. விந்து முந்தும் பிரச்சினை உள்ள ஆண்களின் உறுப்பின் முனையில் உள்ள மொட்டுப் பகுதியானது ஏனையவர்களதை விட தூண்டப்படும் போது கூடியளவு உணர் வினைத்திறனைக் கொண்டிருப்பதே முந்துவதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.

இதனால், அப்பகுதியை சற்று மரக்கச் செய்யும் விறைப்பு மருந்துகள் ( Topical anaesthetics) உதவும் என்ற கருத்து நிலவுகிறது. இம் மருந்துகள் உறுப்பின் மொட்டுப் பகுதியின் உணர்நிலையை ( Sensitivity ) சற்றுக் குறைப்பதன் மூலம் விந்து விரைவதைத் தாமதப்படுத்துகின்றன. ஆயினும், விந்து வெளியாகும் உணர்வையோ, திறனையோ பாதிப்பதில்லை. பாவனையில் உள்ள இம் மருந்துகளின் ஆற்றல் பற்றிய சிறப்பான ஆய்வுகள் செய்யப்படாத போதும் கிடைக்கும் ஆய்வு முடிவுகளானது இவை ஓரளவு செயற் திறன் கொண்டவை என்பதை உறுதிப்படுத்துகின்றன.

களிம்பு மருந்துகளை விட விசிறப்படும் (Spray ) மருந்துகள் உபயோகிப்பதற்கு சுலபமானவை. அத்துடன், விசிறியவுடன் உலர்ந்து விடுவதால் பாவிப்பதும் வெளிப்படையாகத் தெரியாது. இது உறுப்பை மருந்தால் அசிங்கப்படுத்தவோ மனத் திடத்தை குறைக்கவோ செய்யாது என்பது சில நன்மைகளாகும். பக்க விளைவுகள் குறைவு என்பதும் தேவைப்படும் போது மட்டும் உபயோகித்து விட்டு நிறுத்தி விடலாம் என்பவையும் மேலதிக சிறப்புகளாகும்.

ஏற்கனவே இத்தகைய பல மருந்துகள் பாவனையில் இருந்தபோதும் புது மருந்துகள் பற்றிய ஆய்வுகளும் அவற்றின் செயற்திறன் பற்றிய களப் பரிசோதனைகளும் இப்பொழுது செய்யப்படுகின்றன. இப்பிரச்சினைக்கான சிகிச்சையின் முதற் படிச் சிகிச்சை முறையாக மாத்திரமன்றி மிகப் பொருத்தமான சிகிச்சை முறையாகவும் இதுவே எதிர்காலத்தில் நிலைக்கும் எனவும் நம்பப்படுகிறது.

போட்டிகளின் போது முந்துவது முந்துபவருக்கு மட்டுமே எப்போதும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். ஆனால், குடும்ப வாழ்வில் முந்துவதைவிடவும் பிந்துவதை விடவும் இணைந்து ஓடுவதில்தான் இருவருக்குமே திருப்தியும் சந்தோஷமும் கிட்டும். ஆனால், கணவன் மனைவி இடையே நம்பிக்கையும் புரிந்துணர்வும் விட்டுக் கொடுப்புகளும் நிலவினால் முந்துவதும் பிந்துவதும் அர்த்தம் கெட்டுப் போகும் என்பதே நிஜமாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
தினக்குரல்

Source: http://தினக்குரல்
Category: பாலியல் | Added by: tamilan (29/07/09)
Views: 28231 | Comments: 9 | Rating: 2.2/4
Total comments: 8
.
.
.
.
.
.
.
.
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]